“கௌரவன்“ பற்றிய எனது விமர்சனம்

செல்வி. சி. மகிஷவர்த்தினி,
8ஆம் வட்டாரம், பேசாலை.

நாமறிந்த மகாபாரதம் குருஷேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதையாகும். எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாக தோற்கடிக்கப்பட்டிருந்த, எங்கள் கதாநாயகன் துரியோதனன் தன் பக்கக் கதையை எடுத்துக்கூறும் கதைக்காவியமே கௌரவன்.
இதுவரை (நான் இப்புத்தகத்தை வாசிக்கும் வரை) மகாபாரதம் என்றால் முதலில் ஞாபகம் வருவது கிருஸ்ணரும், பாண்டவர்களுமே. ஆனால், இப் புத்தகத்தை வாசித்த பிறகு இக்கதையின் கதாநாயகன் துரியோதனனே எம் மனதில் நிரம்பியிருப்பான்.
எந்தவொரு விடயத்திற்கும் பல கோணங்கள் உண்டு. அவற்றை நாம் பார்க்கும் விதத்தில்தான் அதிலுள்ள நியாயம் மற்றும் உண்மை என்பன எமக்குத் தெரியும். அந்த வகையில் வில்லனான துரியோதனனின் பக்கம் இருந்து எழுதிய கௌரவன் எனும் நூல் என்னைப் பொறுத்தமட்டில், வியாசர் எழுதிய மகா பாரதத்தை விடவும் சிறப்பான நூலாகக் காணப்படுகின்றது.
“கௌரவன்” எனும் புத்தகத்தின் கதாநாயகனான துரியோதனன் உண்மையில் எப்படிப்பட்டவன்? என்ற கேள்விக்கு நாம் பின்வருமாறு பதில் அளிக்கலாம்.

  • வீரமும் தன்மானமும் தன்னம்பிக்கையும் கொண்டவன்
  • சிறுவயதிலிருந்தே எளிமையான வாழ்க்கையை விரும்புபவன்
  • சாதி, மதம், மொழி பேதங்களை மறுப்பவன், அவற்றைப் பற்றி சிறுதுளி கூட கணக்கில் எடுக்காதவன்
  • ஏழை, எளியவர்களுக்கு உதவும் மனம் கொண்டவன்
  • சிறந்த கொடை வள்ளல்
  • சகோதரர்கள் மேல் பாசம் கொண்டவன்
  • நண்பர்களான கர்ணனையும் அசுவத்தாமனையும் தன்னைவிட மேலாக நம்புபவன், அவர்கள் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவன்
  • பிராமணர், சத்திரியர், சூத்திரர், வேடுவர் என்ற இனப்பிரிவைக் கண்டு கோபமடைபவன்
  • ஒரு திறமையான வில்லாளனான கர்ணனை ஒரு தேரோட்டியின் மகன் என இவ்வுலகம் ஒதுக்கியபோது, தன் நண்பன், அங்க நாட்டு அரசன் என இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியவன்

மாவீரன் துரியோதனன், அவனது காதலியான சுபத்திரையினால் ஏமாற்றப்பட்டவன். சிறு வயதில் சாதியைப் பொருட்படுத்தாமல் இருந்ததற்காகப் பல தண்டனைகளை அனுபவித்தவன். தன் மனைவி பானுமதி மீது மிகுந்த பாசமுடையவன். ஒரு நல்ல தந்தையாகவும் கணவனாகவும் வாழ்ந்தவன்.
பல அவமானங்களையும் திட்டுக்களையும் தாங்கிக் கொண்டவன். தன்னால் வேறு எவரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைப்பவன். எந்தவொரு விடயத்தையும் புத்திசாதுரியமாக எதிர்கொண்டவன். சாஸ்திரங்களை நாம்பாதவன். உண்மையான தர்மத்தைப் பின்பற்றியவன்.
பொதுவாக அனைவரின் எண்ணங்களில் மகாபாரதத்திலிருந்து எடுத்துக் கொண்ட விடயம் ”தர்மம் எப்போதும் வெல்லும்” என்பதுதான். இக்கூற்று வேண்டுமென்றால் உண்மையாக இருக்கலாம். ஆனால், மகாபாரதக் கதையில் அது நடக்கவில்லை. உண்மையில் தர்மம் நயவஞ்சகமாக வீழ்த்தப்பட்டது. தர்மம் என்ற பெயரில் அந்தத் துரோணன், தௌமியன் போன்ற பிராமணர்களும் பாண்டவர்களும் செய்த அநியாயத்திற்கு அளவே இல்லை. இவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், இவர்கள் நம்பும் புனித நூல்கள் அவ்வாறுதான் சொல்கின்றன.
மேலும் இக் காவியத்தில் மிக முக்கியமானவன் கிருஸ்ணன். தான் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஏமாற்றியவன், சூழ்ச்சிக்காரன். இவனின் சூழ்ச்சியினால்தான் துரியோதனன் தோற்கடிக்கப்பட்டான்.
இப்படியாக அனைத்து விடயங்களையும் கதாசிரியர் மிகச் சிறப்பாக மறுபார்வைக்குட்படுத்தியுள்ளார். அவருக்கு துரியோதனன் மேல் உள்ள விருப்பும் மரியாதையும் மிகத் தெளிவாகவே இந்நூலில் புலப்படுகிறது.
அது மட்டுமன்றி, இக்கதையில் கூறப்படும் ஏகலைவன் மற்றும் ஜரன் போன்ற கதாபாத்திரங்கள் இந்நூலை மேலும் சிறப்பாக்குகின்றன. கிருபர், சார்வங்கன் போன்றோரை இக்கதை மிக அழகாக அறிமுகப்படுத்தியுள்ளது. கூடவே, தட்சகன் என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பகுதி சிறிது எரிச்சலூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. ஆயினும் சிறப்பாகவே காணப்படுகின்றது.
இவ்வாறாக, பல்வேறு நல்ல சிந்தனைகளையும் எம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய விடயங்களையும் இப்புத்தகம் எமக்கு கொடுக்கின்றது. அவற்றை நூலாசிரியர் மிக மிக சிறப்பாக எமக்குத் தொகுத்து வழங்கியுள்ளார். இப்புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் வைப்பதற்கு மனம் வராது. ஆகவே, நீங்களும் இப்புத்தகத்தை படித்துப் புதுவிதமானதொரு அனுபவத்தைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்புத்தகத்தை என் தந்தைக்கு வழங்கிய அவரது நண்பர் திரு. தேவா அங்கிள் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

- சி. மகிஷவர்த்தினி
10ஆம் வகுப்பு.


Comments

Post a Comment

Popular posts from this blog